தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர மின் மற்றும் மின்னணு தொழில் நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக, 1973 ஆம் ஆண்டில் மத்திய மின் பொருள் சோதனைக்கூடம் நிறுவப்பட்டது.
இச்சோதனைக்கூடமானது, இந்திய தர சபையின் ஒரு வாரிய அங்கமான சோதனை மற்றும் அளவொப்புமை ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார குழுமம் (என்.ஏ.பி.எல்) மற்றும் ஒன்றிய அரசின் நுகர்வோர் அமைச்சக இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்த சோதனைக்கூடமானது, இந்தியாவிலுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், இந்திய தர நிர்ணய அளவீட்டின்படி, மின்பொருள், மின் கம்பிவடப் பொருட்கள் மற்றம் மின் உபகரணங்களைத் தயாரிக்கும் தொழில்முனைவோருக்கு சோதனை செய்யும் வசதிகள் அமையப்பெற்று அளிக்கின்றது. மின்பொருள் உற்பத்தி செய்யும் தொழில்முனைவோர்களுக்கு சோதனை வசதிகளை வழங்குகிறது. இந்த சோதனைக்கூடமானது அங்கீகார நிலையை தொடர்ந்து பேணுவதற்கு உபகரணங்கள்/கருவிகளை வாங்கி நிறுவப்படுவதன் மூலமும், உபகரணங்கள் / கருவிகளை குறித்த காலங்களில் அளவொப்புமை செய்தும் அவ்வப்போது பலப்படுத்தப்பட்டு வருகின்றது.
மாவட்ட தொழில் மையங்களின் உரிய அதிகாரம் பெற்ற அதிகாரிகளால் வெளிசந்தையில் சேகரிக்கப்பட்ட மின்பொருட்களின் மாதிரிகள், இந்திய தர நிர்ணய அமைவனம் (பி.ஐ.எஸ்), மூலம் வழங்கப்பட்ட மாதிரிகளும் இந்த சோதனைக்கூடத்தில் சோதனை செய்யப்படுகின்றன. தமிழக அரசு இந்த ஆய்வகத்தை, அரசுத்துறைகள், அரசு சார்ந்த நிறுவனங்களால் மின் பொருட்கள் மற்றும் சாதனங்கள் வாங்குவதற்கு ஒரு தர ஆலோசகராக நியமித்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, இரயில்வே, காவல்துறை போன்ற இதர அரசுத்துறைகளுடன் தனியார் நுகர்வோர்க்கு அவர்களின் மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை சோதனை செய்வதற்கான தேவைகளை பூர்த்தி செய்வதற்கான வசதிகளை இரசாயன பரிசோதனை மற்றும் பகுப்பாய்வகம், கிண்டி மற்றும் மண்டல சோதனை ஆய்வுக்கூடங்கள், மதுரை, கோயம்புத்தூர், சேலம் மற்றும் தூத்துக்குடி ஆகியன வழங்குகின்றன. இந்த சோதனைக் கூடங்கள் எஃகு, சிமெண்ட், செங்கல், தண்ணீர், மணல், இரப்பர், தாதுக்கள் மற்றும் கனிமங்கள், சுண்ணாம்பு, நிலக்கரி, கிருமி நாசினித்தூள் போன்றவற்றிற்கான சோதனைகளை மேற்கொள்வதுடன் அதற்கான வசதிகளை மிகக் குறைந்த சோதனைக் கட்டணத்தில் வழங்குகின்றன.
குறு,சிறு,மற்றும் நடுத்தர நிறுவனதுறையிலுள்ள தொழில் மற்றும் வணிக இயக்குநரகத்தின் கீழ் குறு, சிறு மற்றும் நடுத்தரதொழிற்சாலைகளின் பரிசோதனைதேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பின்வரும் இரசாயனப் பரிசோதனைஆய்வுக்கூடங்கள் நிறுவப்பட்டுள்ளன.
இரசாயனப் பரிசோதனை மற்றும் பகுப்பாய்வகம், கிண்டி, சென்னை- 32 ல் 1951ம் ஆண்டு நிறுவப்பட்டு, அப்போதைய பாரதப் பிரதமர் மாண்புமிகு பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இந்த ஆய்வுக்கூடம் மாநிலத்தில் உள்ள பல்வேறு வகையான தொழிற்சாலைகளின் பரிசோதனை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டது.
மதுரை மண்டல சோதனை ஆய்வுக் கூடம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், தேனி, இராமநாதபுரம் போன்ற தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பரிசோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1971ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஜவுளி, ஃபவுண்டரிகள், பம்புகள், மோட்டார்கள் மற்றும் பிற தொடார்புடைய தொழிற்சாலைகளின் வளர்ச்சி மிகப் பெரிய அளவில் இருந்ததால் இத்தொழிற்சாலைகளின் பரிசோதனை தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு பரிசோதனை ஆய்வுக்கூடம் அவசியம் தேவை என்பதை அரசாங்கம் உணர்ந்தது. எனவே கோவை, நீலகிரி, திருப்பூர், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளின் பரிசோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக 1976 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் மண்டல சோதனை ஆய்வுக் கூடத்தை அரசு நிறுவியது.
சேலத்தில் அமைந்துள்ள மண்டல சோதனை ஆய்வுக்கூடம் ஆரம்பத்தில் சேகோ
ஆராய்ச்சி ஆய்வகம், சேலம் என்று அழைக்கப்பட்டது. இந்த ஆய்வகம்
1961 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சேகோ மற்றும்
மரவள்ளிக் கிழங்கு மாவு (ஸ்டார்ச்) தொழில்களைப் பாதுகாப்பதற்காக இந்திய
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கட்டண ஆணையத்தின் அடிப்படையில் நிறுவப்பட்டது.
முக்கியமாக ஸ்டார்ச் மற்றும் சேகோ தொழிற்சாலைகளின் பரிசோதனைத் தேவைகளைப்
பூர்த்தி செய்வதற்காக நிறுவப்பட்டது.
சேகோ மற்றும் ஸ்டார்ச் தயாரிப்புகளைத் தவிர பிற தொழிற்சாலைகளின்
மாதிரிகளை பாரிசோதனை செய்வதற்காக 1990 ஆம் ஆண்டில் இந்த ஆய்வகம் மண்டல
சோதனை ஆய்வுக்கூடமாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த ஆய்வுக்கூடம் சேலம் மற்றும்
அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களான நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு
போன்றவற்றில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பரிசோதனை தேவைகளை பூர்த்தி
செய்கிறது.
தூத்துக்குடியில் இருந்த மெக்னீசியம் கார்பனேட் ஆலை 1971 ஆம் ஆண்டு உப்பு தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் உப்பு பொருட்களை சுத்திகரிப்பு மற்றும் தரம் மேம்படுத்துவதற்காக, ‘உப்பு மற்றும் கடல் சார் இரசாயனங்களுக்கான மாநில ஆராய்ச்சி நிறுவனம்’ என மாற்றப்பட்டது. உப்பு சார்ந்த பொருட்கள் மற்றும் இதர தொழிற்சாலை மாதிரிகளை பரிசோதிக்க வசதியாக உப்பு மற்றும் கடல்சார் இரசாயனங்களுக்கான மாநில ஆராய்ச்சி நிறுவனம் 1992 ஆம் ஆண்டில் மண்டல சோதனை ஆய்வுக்கூடமாக மாற்றப்பட்டது. இந்த ஆய்வுக்கூடம் தூத்துக்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள திருநெல்வேலி, தென்காசி, இராமநாதபுரம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் பரிசோதனை தேவைகளைப் பூர்த்தி செய்கிறது.
மேற்கூறிய ஆய்வுக்கூடங்கள், குறு, சிறு நடுத்தரத் தொழிற்சாலைகள், பெருந்தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள், பொதுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்கின்றன. இந்த ஆய்வுக்கூடங்களில் தொழிற்சாலைகளின் மூலப்பொருட்கள் மற்றும் தயாரிப்புகள் சோதிக்கப்படுகின்றன. பின்வரும் தயாரிப்புகளுக்கான சோதனை வசதிகளை வழங்குகின்றன.
இந்த ஆய்வுக்கூடங்களில் பெறப்படும் மாதிரிகளை பரிசோதனை செய்ய அரசு ஆணை எண் 38 குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவன (இ) துறை, நாள் 22.05.2020 இன் படி பரிசோதனைக் கட்டணம் மற்றும் பொருந்தக் கூடிய சரக்கு மற்றும் சேவை வரியுடன் (GST) பரிசோதனைக் கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
சென்னை தொழிற் கூட்டுறவு பகுப்பாய்வு நிலையம் (மைகால்) தனது உறுப்பினர்களான மருந்து உற்பத்தி நிறுவனங்களின் மாதிரிகள்/உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்து அவற்றிற்கென நிர்ணயிக்கப்பட்ட தரத்தின் அளவீடுகளை ஆய்வு செய்து ஆய்வுச் சான்றிதழ்களை வழங்கி வருகிறது. உறுப்பினர் மருந்து நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் மாதிரிகள் தவிர, உறுப்பினர்கள் அல்லாதவரும் சுங்கத்துறை மற்றும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செயல்படும் அரசு சுகாதார துறைகளிடமிருந்து பெறப்படும் மாதிரிகளும் இங்கு சோதிக்கப்படுகின்றன. மருந்து தயாரிப்புகள் தவிர, உணவு கலப்படம் தடுப்புச் சட்டத்தின்படி உணவு பொருட்களை சோதனை செய்வதிலும் இச்சங்கம் ஈடுபட்டு வருகிறது. மைக்கால் சங்கத்தின் குன்னூர் பகுப்பாய்வு மையம் ஐ.எஸ்.ஓ (ISO) சான்றிதழ் பெற்றுள்ளது. 2020-21ஆம் ஆண்டில் இச்சங்கம் ரூ.30.47 இலட்சத்தினை சேவைக் கட்டணமாக ஈட்டியுள்ளது.