எம் எஸ் எம் ஈ என்பது குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களைக். குறிக்கும்.
இது புத்தொழில்கள் மற்றும் ஒப்பீட்டளவில் குறைந்த முதலீடும் வரையறுக்கப்பட்ட
செயல்பாடுகளும் கொண்டசிறிய தொழில் முன்னெடுப்புகளையும் உள்ளடக்கியதாகும்.
கடந்த ஐந்து பத்தாண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
இந்தியப் பொருளாதாரத்தின் மிக முக்கியமும் துடிப்பும்கொண்டவையாக
உருவெடுத்துள்ளன. இவை
பெருந்தொழில்நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் குறைந்த
முதலீட்டில் அதிக வேலைவாய்ப்பைத் தருவதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில்
மிக முக்கியமான பங்கை வகிப்பதோடு நாட்டின் பின் தங்கிய மற்றும்
ஊரகப்பகுதிகளைதொழில்மயப்படுத்துவதன் மூலம் பகுதிகளுக்கிடையிலான வளர்ச்சி
வேறுபாட்டைச் சமப்படுத்துவதிலும் நாட்டின் வருமானமும் வளமும் சமச்சீராகப்
பங்கிடப்படுவதிலும் பங்காற்றுகின்றன. துணை நிறுவனங்களாக பெருந்தொழில்
நிறுவனங்களுக்குத் துணை செய்வதோடு நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு
குறு, சிறு மற்றும் நடுத்தர பெரும் பங்காற்றுகின்றன.
எம் எஸ் எம் ஈ தொழில் நிறுவனங்கள் கீழ் வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன:
உற்பத்தித் தொழில் நிறுவனங்கள்: பொருள் உற்பத்தியில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் எனப்படுகின்றன. அவை இயந்திர தளவாடங்களில் செய்யும் முதலீடு மற்றும் ஆண்டு விற்றுமுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன.
சேவைத் தொழில் நிறுவனங்கள்: சேவை வழங்குதலில் ஈடுபடும் தொழில் நிறுவனங்கள் சேவைத் தொழில் நிறுவனங்கள் எனப்படுகின்றன. அவை கருவிகளில் செய்யும் முதலீடு மற்றும் ஆண்டு விற்றுமுதலின் அடிப்படையில் வரையறுக்கப்படுகின்றன. எம் எஸ் எம் ஈ பகுப்பு முறை
1.7.2020 முதல் நடைமுறைக்கு வந்த ஒன்றிய அரசின் அறிவிக்கையில் கூறப்பட்ட கூட்டு நியதியின் படி
கூட்டு நியதி : இயந்திர தளவாடங்கள் அல்லது கருவிகளில் செய்யப்படும் முதலீடு | ||||
பொருளுற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தித் தொழில் நிறுவனங்கள் மற்றும் சேவை வழங்கும் சேவைத் தொழில் நிறுவனங்கள் | இயந்திர தளவாடங்கள் அல்லது கருவிகளில் செய்யப்படும் முதலீடு ரூ.1 கோடிக்கு மிகாமல் மற்றும் ஆண்டு விற்று முதல் ரூ.5 கோடிக்கு மிகாமல் | இயந்திர தளவாடங்கள் அல்லது கருவிகளில் செய்யப்படும் முதலீடு ரூ.10 கோடிக்கு மிகாமல் மற்றும் ஆண்டு விற்று முதல் ரூ.50 கோடிக்கு மிகாமல் | இயந்திர தளவாடங்கள் அல்லது கருவிகளில் செய்யப்படும் முதலீடு ரூ.50 கோடிக்கு மிகாமல் மற்றும் ஆண்டு விற்று முதல் ரூ.250 கோடிக்கு மிகாமல் |
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பதிவு உத்யம் பதிவு என்றழைக்கப்படுகிறது. பதிவின் முடிவில் உத்யம் பதிவுச் சான்றிதழ் மின் சான்றிதழாக வழங்கப்படுகிறது. 1.7.2020 அன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய பகுப்பு முறைப்படி உற்பத்தி மற்றும் சேவைத் தொழில் நிறுவனங்களுக்கிடையே முதலீட்டின் அடிப்படையில் எவ்விதப் பாகுபாடும் இல்லை.
குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களுக்குபிணையமின்றி கடனுதவி கிடைக்கும் வகையில் இந்திய அரசால் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாத நிதியத் திட்டம் தொடங்கப்பட்டது. செயல்பாட்டில் இருக்கும் மற்றும் புதிதாகத் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவையாகும். இந்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகமும் இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கியும் இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கென குறு மற்றும் சிறு தொழில் நிறுவனனகளுக்கான கடன் உத்தரவாத நிதிய அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அறக்கட்டளை அமைப்பினை நிறுவியுள்ளன.
எம் எஸ் எம் ஈ ஆக பதிவு செய்வதன் முதன்மையான நன்மை கடன் பெறுவதில் அளிக்கப்படும் முன்னுரிமை ஆகும். புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தும் நிறுவனத்தின் உரிமையாளராயினும் ஊரகப் பகுதிப் பெண்களைப் பணியாளர்களாகக் கொண்டு மசாலாப் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளராயினும் தமது குறுகிய கால மற்றும் நீண்ட காலத் தேவைகளுக்காக கடன் பெற வேண்டியிருக்கும். வங்கிகள், இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டாயமாக பின்பற்றப்படவேண்டிய வழிகாட்டுதலின் படி, ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டுத் தொகையை குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவநங்களுக்கு கடன் தரவென்று ஒதுக்குகின்றன. உத்யம் பதிவுச் சான்றிதழ் இருந்தால் இக்கடன் தொகையை, குறைந்த பட்ச சிரமங்களுடன், முன்னுரிமை அடிப்படையில் பெற இயலும்.
சொத்து அல்லது நிதி வகையிலான பிணையம் ஏதும் இல்லாமல் தொழில் முனைவோரில் பெரும்பாலானோர் தமது தொழில் நிறுவனங்களைத் தொங்கத் தேவையான நிதி மூலதனத்தைக் கடனாகப் பெறுவதில் பெருத்த இடர்ப்பாடுகளைச் சந்திக்கின்றனர். ஆனால் எம் எஸ் எம் ஈ பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு வழக்கத்துக்கும் குறைவான வட்டி வீதத்தில் கடன் வழங்கப்பட வேண்டுமென நிதி நிறுவனங்கள் பிரத்யேகமாக அறிவுறுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நிதி நிறுவனங்கள் மூலம் எம் எஸ் எம் ஈ பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் தமது நிதித் தேவைகளை நிறைவு செய்து கொள்ள இயலும்.
ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்கும் தொழில் ஊக்குவிப்பு மானியங்களைப் பெற எம் எஸ் எம் ஈ பதிவு பெற்ற தொழில் நிறுவனங்கள் தகுதி பெற்றவையாகின்றன.
இந்திய அரசு பன்னாட்டு அளவில் பல்வேறு பரிமாற்ற நிகழ்வுகள், கைவினைத் திறன் கண்காட்சிகள்,பொருட்காட்சிகள், வாணிகத்துடன் தொடர்புடைய நிகழ்வுகள் பலவற்றை நிகழ்த்துகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு பதிவு பெற்றுள்ள நிறுவனம் இத்தகைய வானிக நிகழ்வுகளில் பங்கு பெற்று புதிய வாணிகத் தொடர்புகளைப் பெற முடியும். இதுவன்றி மானியங்கள், வரி விலக்குகள் மற்றும் தொழில் நுட்ப உதவிகள் வழங்குவதன் மூலம் அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஏற்றுமதி செய்வதையும் ஊக்குவிக்கிறது..
ஒவ்வொரு ஒன்றிய அமைச்சகம் / துறை / பொதுத்துறை நிறுவனம் தனது ஆண்டுக் கொள்முதலில், அது உற்பத்திப் பொருட்கள் அல்லது சேவை எதுவாயினும், 25% ஐ குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களிலிருந்து பெற வேண்டுமென்றும் / உள் ஒதுக்கீடாக 5 % பட்டியல் வகுப்பினர் / பட்டியல் பழங்குடியினருக்கு உரிமையான நிறுவனங்களிலிருந்து பெறப்பட வேண்டுமென்றும் கொள்கை வகுக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுதொழில் கழகத்தின் ஒரு முனைப் பதிவுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிறுவனங்கள் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கையின் படி பொது ஏல ஆவணங்களை இலவசமாகப் பெறவும் விருப்பார்வ வைப்புத்தொகை செலுத்துவதிலிருந்து விலக்கு பெறவும் தகுதி பெற்றவையாகின்றன.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் பதிவு பெற்ற குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் தமது உற்பத்திப் பொருட்களை வாங்கியவர்களிடமிருந்து அதற்கான விலையைத் தாமதமின்றி பெறும் உரிமையை உறுதி செய்கிறது. தாமதப்படுத்தப்படின் அதற்கான வட்டியைப் பெறவும் இதில் பிரச்னைகள் எழுகையில் அதனை பேச்சுவார்த்தை மற்றும் வழக்காடல் மூலம் எளிதாகவும் குறைந்த கால அளவிலும் தீர்த்துக் கொள்ளவும் வழிவகைகள் செய்யப்பட்டுள்ளன. குறு அல்லது சிறு தொழில் நிறுவனம் தனது உற்பத்திப் பொருள் அல்லது சேவையை வேறொரு நிறுவனம் அல்லது தனியருக்கு விற்கும் தருணங்களில் வாங்கியவர் அதற்குண்டான தொகையை இருவருக்குமான ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கால அளவுக்குள் செலுத்திட வேண்டும். ஒப்பந்தத்தில் கால அளவு குறித்திருக்கப்படாவிட்டால் வாங்கியவர் பொருள் அல்லது சேவையைப் பெற்ற 15 நாட்களுக்குள் அதற்கான தொகையைச் செலுத்திட வேண்டும். மேலும் எந்த நிலையிலும் குறு அல்லது சிறு நிறுவனத்துக்கு தரப்பட வேண்டிய தொகை பொருள் அல்லது சேவையைப் பெற்ற 45 நாட்களைத் தாண்டி நிலுவையில் இருக்கக் கூடாது. அப்படி அது நிலுவையில் வைக்கப்பட்டால் வட்டி செலுத்தப்பட வேண்டும். அபராத வட்டி வீதம் இந்திய ரிசர்வ் வங்கி வட்டி வீதத்தைப் போல் 3 மடங்காக இருக்கும்.
பதிவுச் சான்றிதழ் பெற்ற குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மின் கட்டணச் சலுகை பெற முடியும்.