Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English

மேற்க்கூறிய முக்கிய சங்கங்களை தவிர்த்து, இதர வணிக வகைப்பாடு சங்கங்கள் இத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அவை பின்வருமாறு:

கைவினைத்தொழில்

தமிழ்நாடு கைவினைத்தொழில் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. தஞ்சாவூர், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கைவினைத் தொழிலில் பாரம்பரியமாக பெயர் பெற்று விளங்கி வந்தன.

தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த மரபு வழி கைவினைத் தொழில்களைப் பாதுகாக்கவும், ஊரகப் பகுதியிலுள்ள கைவினைஞர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பல கைவினைஞர்கள் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

கைவினைப் பொருட்களில் வெண்கலச் சிலைகள், உலோகமணிகள், கலை வண்ணமிக்க உலோகத் தட்டுகள், சுவர் அலங்கார பொம்மைகள், மரச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், இசைக்கருவிகள், பொம்மைகள், அச்சிடப்பட்ட துணிவகைகள், மெழுகு பூசி வண்ணப்படங்களை அச்சடித்தல், செயற்கை வைரம், தஞ்சாவூர் ஓவியங்கள் ஆகிய பொருட்கள் அடங்கும்.

தையற் தொழில்

தமிழ்நாட்டில் உள்ள காவலர்களின் குடும்ப பெண்களுக்கு வேலைவாய்ப்பளித்து அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்த காவலர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.

காவலர்களின் சீருடைகளை தைக்கும் பணியை இச்சங்கங்களின் உறுப்பினர்கள் மேற்கொண்டு வருமானம் ஈட்டி வருகின்றனர்.

கூட்டுறவு தொழிற்பேட்டைகள்

சிறிய மற்றும் மிகச் சிறிய தொழில் முனைவோர்களுக்குத் தேவையான தொழிற்கூடங்கள் , மேம்படுத்தப்பட்ட மனைகள், மின்சாரம், தண்ணீர் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை ஒருசேர நல்கும் நோக்கத்துடன் கூட்டுறவுத் தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்கூட்டுறவுத் தொழிற்பேட்டைகளை அமைப்பதற்கு மிகக் குறைந்த வட்டியில் தமிழ்நாடு அரசும், ஆயுள்காப்பீட்டுக் கழகமும் முதலில் நிதி உதவி அளித்துள்ளன.

இத்தகைய தொழிற்பேட்டைகள் வியாசர்பாடி, பொள்ளாச்சி, சிவகாசி, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, கோவை மற்றும் நாகர்கோவில் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டுள்ளன.

ஒப்பந்தத் தொழிலாளர்கள்

ஒப்பந்தத் தொழிலாளர் நீக்க சட்டத்தின்படி தொழிலகங்களில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளர்களை அடியோடு நீக்க வேண்டிய அத்தியாவசியம் ஏற்பட்டது. எனவே, இந்தச் சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர் சேவை தொழிற் கூட்டுறவுச் சங்கங்களில் உறுப்பினர்களாக்கப்பட்டு பணி நீக்கத்திலிருந்து பாதுகாக்கப்பட்டனர்.

இந்த சங்கங்கள் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்பும், கூலியும் வழங்கி அவர்களது வாழ்க்கைக்கு ஒரு புத்துயிர் அளித்து வருகிறது. சங்கங்கள் துவங்கிய பின் தொழிலாளர்கள் ஒப்பந்தகாரர்களின் ஆதிக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கான முதல் சேவை சங்கம் எம்.ஆர்.எல். இண்ட்கோசர்வ் என்ற பெயரில் 1983ல் துவங்கப்பட்டது. பிறகு, நெய்வேலியிலுள்ள என்.எல்.சி., திருச்சியிலுள்ள பி..ஹெச்.இ.எல், ராணிப்பேட்டை பி..ஹெச்.இ.எல், சேலம் துருப்பிடிக்காத எஃகு தொழிற்சாலை, கல்பாக்கம் அணு மின் நிலையம் ஆகிய இடங்களில் துவங்கப்பட்டது.

தற்போது மொத்தம் 31 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒப்பந்தத் தொழிலாளர் கூட்டுறவு சங்கங்களில் சேர்ந்து பணிபுரியும் தொழிலாளர் உறுப்பினர்களுக்கு குறைந்த பட்ச கூலி, பணிக்கொடை, ஈட்டிய விடுப்புடன் கூடிய கூலி, தேசிய மற்றும் பண்டிகை விடுப்புடன் கூலி, தொழிலாளர் இழப்புக் காப்பீடு, காலணி மற்றும் சீருடைகள், மருத்துவச் செலவு முதலியவற்றுக்கு ஆகும் செலவுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து பெற்று சங்கங்களின் மூலம் வழங்கப்படுகின்றன.

தொழிற்சாலை மற்றும் தொழிலாளர் சட்டங்களின்படி, ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைத்து பயன்களும் பெற்று வருகின்றனர்.

பொறியியல்

கிராமப்புறங்களில் பித்தளை பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் திறன் பெற்ற ஊழியர்கள், ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றவர்கள், தகடு உலோக ஊழியர்கள், வேலையில்லா பட்டையத் தகுதி பெற்றோர் மற்றும் பட்டதாரிகள் முதலியோரை இச்சங்கங்களில் உறுப்பினர்களாக்கி வேலை வாய்ப்பு அளிப்பதே பொறியியல் தொழிற் கூட்டுறவு சங்கங்களின் நோக்கமாகும்.

பொறியியல் சங்கங்களில் பூட்டு, நெசவு ஆலைகளுக்குத் தேவையான பாபின்கள், இரும்பு அலமாரிகள், கட்டிடத்திற்கு தேவையான இரும்பு திராவிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும், தானியங்கிகளை சர்வீஸ் செய்யும் பணி மற்றும் பர்னிச்சர்களை பழுது பார்த்தல் பணிகளை மேற்கொள்ப்படுகின்றன.

அச்சிடுதல்

அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடனும், சிறு அச்சக உரிமையாளர்களுக்கு அச்சுப் பணிகளைப் பெற்றுத் தரும் நோக்கத்துடனும் அச்சகக் கூட்டுறவுச் சங்கங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இச்சங்கங்கள் அரசுத் துறை, அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து அச்சுப் பணி ஆணைகள் பெற்று அவற்றினை தங்களது உறுப்பினர் அச்சகங்கள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் நிறைவேற்றி வருகின்றன.

செங்கல்

மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் செங்கல் தொழிலாளர்களுக்கு ஆதாயமிக்க நிரந்தரமான வேலை வாய்ப்பை அளிக்கும் நோக்கத்துடன் செங்கல் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டன.

தற்பொழுது, நாகப்பட்டினம், திருப்பூர், திருச்சி, தேனி மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஏழு இடங்களில் செங்கல் தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மாநிலத்தில் இயங்கி வருகின்றன.

உலோகம்

உலோக தொழிலாளர் தொழிற் கூட்டுறவு சங்கங்கள், பராம்பரியமாக தொழிலில் ஈடுபட்டு வரும் பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் பிற்படுத்தப்பட்ட இனத்தைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கவும் துவங்கப்பட்டன. இச்சங்கங்கள் கைவினைஞர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளித்து வருகின்றன.

இச்சங்கங்கள் எல்லாவிதமான பித்தளை, செம்பு, அலுமினியம், துருப்பிடிக்காத எஃகு பாத்திரங்கள் மற்றும் பூஜை சாமான்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்கின்றன.

அரசு மருத்துவமனைகள், ஆதிதிராவிட நல இல்லங்கள், சத்துணவு கூடங்கள், கோவில்கள் மற்றும் மறு வாழ்வுத் துறை முதலியவற்றிற்கு பாத்திரங்கள் வழங்கி வருகின்றன.

சிறப்பு வகை

ஏழை மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கத்துடனும், பின்வரும் தனித்துவமான வணிக நடவடிக்கைகளில் ஈடுப்பட்டும், 34 சிறப்பு வகை தொழிற் கூட்டுறவு சங்கங்கள் இத்துறையின் கீழ் செயல்ப்பட்டு வருகின்றன.

  • பகுப்பாய்வுக் கூடம்
  • பாம்பு பிடிப்போர்
  • பொருள் போக்குவரத்து
  • சிமென்ட் பொருட்கள்
  • மூலிகை
  • முந்திரி பதப்படுத்துதல்
  • ஆயத்த ஆடை
  • சாக்கு பை
  • காகித அட்டை

மேலும், மேற்க்கூறிய முக்கிய சங்கங்களை தவிர்த்து, தீப்பெட்டி, தோல் பதனிடுதல் சேவை மற்றும் தொழிலாளர், கரி மற்றும் கல்கரி, பாலித்தின் மற்றும் ஆட்டோ சேவை போன்ற வணிக வகைகளும் இத்துறையில் செயல்ப்பட்டு வருகின்றன.