இந்தியாவின் தென்கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள தமிழ்நாடு இந்தியப் பொருளாதாரத்துக்குக் கணிசமான அளவு பங்களிப்பை வழங்குவதுடன் பல பதின்ம ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் படிநிலை உயர்வைக் கண்டதாகும். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.80% பங்களித்து இந்திய அளவில் இரண்டாமிடத்தில் உள்ளது. மாநிலத்தின் மொத்த உற்பத்தி 2019-20 ஆம் ஆண்டு இறுதியில் 265 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தானிகள், மருந்துப்பொருட்கள், ஜவுளி, தோல் பொருட்கள், வேதிப்பொருட்கள், பொறியியல் சார்ந்த பொருட்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான சேவைகள் உள்ளிட்ட பலவிதமான உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் முன்னணி மாநிலமாக உள்ளது.
மாநிலத் தலைநகரான சென்னை இந்தியாவின் மென்பொருள் சேவைத்துறையின் தலைமையிடமாக உள்ளது. சாதகமான புவி அமைவிடம், இணக்கமான வணிக சூழ்நிலை, அதி நவீனமான உள்கட்டமைப்பு, முனைப்பு மிக்க அரசு நிர்வாகம்மற்றும் உகந்த தொழில்சூழல் இவற்றால் தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார ஆற்றல் மையமாகவும் முதலீட்டுக்கு ஏற்ற இடமாகவும் உள்ளது. திடமான பெரும்பொருளாதார அடிப்படைக் கட்டமைப்பு, வலிமையான தொழிற்தளம் மற்றும் அபரிமிதமான திறன்மிகு மனித ஆற்றல் ஆகியவற்றினால் வெளீநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. இங்கமைந்த சர்வதேசத் தரமிக்க பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களால் வளர்த்தெடுக்கப்பட்டு ஆண்டுக்கு 10 இலட்சம் வீதம் வெளிவரும் பட்டதாரிகள் தொழில்நிறூவனங்களுக்கு ஏற்றா மனிதவளத்தை வழங்குகின்றனர். சென்னை உலகின் வாழ்தற்கெளிய முதல் 50 நகரங்கள் பட்டியலில் 12 ஆவது இடத்தில் உள்ளது. தமிழகம் இந்திய அளவில் நல்ல நிர்வாகக் குறியீட்டுப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.