Micro, Small and Medium Enterprises Department
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை

English
முன்னுரை

1956ம் ஆண்டு தொழிற் கூட்டுறவுகளின் நிர்வாக கட்டுப்பாடு, கூட்டுறவுத் துறையிலிருந்து தொழில் வணிக துறைக்கு மாற்றப்பட்டது. துறையில் தொழிற் கூட்டுறவுக்கெனத் தனிப்பிரிவு ஒன்று அமைக்கப்பட்டு, தொழிற்கூட்டுறவுகளின் வளர்ச்சியினை பிரத்தியேக கவனத்தோடு மேற்பார்வை செய்யப்படுகிறது. தொடக்க காலத்தில் ஊரக கைவினைஞர், தொழிலாளர்கள் மற்றும் உழைப்பாளிகளின் மேம்பாட்டுக்கென தொழிற்கூட்டுறவுகள் தொடங்கப்பட்டு, காலப்போக்கில், சிறுதொழில் முனைவோர், உற்பத்தியாளர் மற்றும் சிறு விவசாயிகளின் நலன் காக்க சேவைத் தொழிற் கூட்டுறவு சங்கங்களும் தொடங்கப்பட்டன.

சிறிய இயந்திரங்களைக் கொண்டு சிறு அளவிலேயே உற்பத்தி செய்தல், போதிய நிதி வசதியின்மை, பெருமளவில் மூலப்பொருள் கொள்முதல் செய்திட இயலாமை, கட்டுப்படியாகாத அடக்கவிலை போன்ற காரணங்களால், சிறு, குறு மற்றும் குடிசைத் தொழில்கள் அல்லல்பட்டன. தனித்தனி அமைப்புகளாகவுள்ள அவை தமது உற்பத்தி பொருட்களை நல்ல விலையில் விற்க முடியவில்லை. மேற்கூறிய இன்னல்களைக் களைந்திட, தொழிற் கூட்டுறவு என்ற ஒரு கூட்டுறவு அமைப்பு உருவாக்கப்பட்டது. தனித்தனி அமைப்புகளை கூட்டுறவு சங்கங்களாக செயல்படுத்தி, மாவட்ட மற்றும் மாநில அளவில் மேம்பட்ட செயல்திறன், புதியன உருவாக்குதல் மற்றும் பெருமளவு விற்பனை ஆகியவற்றை எய்திட வழிநடத்துக்கின்றன.

குறிக்கோள்கள்

வறுமைக் கோட்டிற்கு கீழே வசிக்கும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு என்னும் இரு குறிக்கோளுடன் தொழிற் கூட்டுறவு சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன.

  • சமூகக் குறிக்கோள் என்பது ஏழை மக்களின் நலனை சுரண்டும் வர்த்தகத்திடமிருந்து அவர்களை பாதுகாப்பதும், செல்வம் அனைத்து தரப்பினரிடமும் பரவலாக இருக்க வழிவகை செய்வதாகும்.
  • பொருளாதாரக் குறிக்கோள் என்பது இச்சங்கங்களின் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கி அதன் மூலம் உற்பத்தித் திறனை பெருக்கி தற்போதுள்ள தொழில் மற்றும் வர்த்தக சுழற்சிக்கு ஏற்ப போட்டியிடும் திறனை அதிகரிக்கச் செய்வதாகும்.
முக்கியப் பங்குகள்

தொழில் வணிகத்துறையின் ஒரு பகுதியான தொழிற் கூட்டுறவு சங்கங்கள், கீழ்கண்டவற்றிக்கு முக்கியப் பங்காற்றி வருகிறது:

  • உற்பத்தி வகை தொழிற் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊரகப்பகுதியிலுள்ள மக்களுக்கு பொதுவாக மகளிருக்கு ஆதாயமிக்க வேலைவாய்ப்பு நல்கியும்,
  • ஒப்பந்த தொழிலாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தொழிலாளர்களை இடைத்தரகர்களின் சுரண்டலிலிருந்து மீட்டும்,
  • கைவினைத் தொழிற்கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஊரக கைவினைஞர்களின் பொருட்களுக்கு சந்தைவாய்ப்பு நல்கியும்,
  • கூட்டுறவுத் தொழிற்பேட்டைகள் மூலம், சிறிய மற்றும் மிகச்சிறிய அளவில் தொழில் முனைவோருக்கு தொழிற்கூடங்கள் மேம்படுத்தப்பட்ட மனைகள் மற்றும் உள்ளமைப்பு வசதிகளை வழங்கியும்,
  • கூட்டுறவுத் தேயிலை ஆலைகள் மூலம் நீலகிரி மாவட்டத்திலுள்ள சிறு தேயிலை உற்பத்தியாளர்களிடமிருந்து பசுந்தேயிலையை நியாயமான விலையில் கொள்முதல் செய்தும்,
  • சேலம் சவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள் சேவைத் தொழிற்கூட்டுறவு சங்கம் எனப்படும் சேகோசர்வ் கூட்டுறவு நிறுவனம் தனது உறுப்பினர் அலகுகள், சேலம் மற்றும் சேலத்தை சுற்றியுள்ள எட்டு மாவட்டங்களில் விளையும் மரவள்ளிக்கிழங்குகளை கொள்முதல் செய்து உற்பத்தி செய்யப்பட்ட சவ்வரிசி மற்றும் ஸ்டார்ச் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தியும்,
  • நீலகிரி மாவட்ட தேயிலைக்கு நல்ல விற்பனை வாய்ப்பை ஏற்படுத்தவும், சிறிய தேயிலை உற்பத்தியாளர்களுக்கு நியாயமான விலையை உறுதிப்படுத்தவும் பொதுவிநியோக அமைப்புகள் மூலம் ஊட்டி டீ விற்பனை ஏற்படுத்தியும்,
  • தேயிலை சந்தையை நிலை நிறுத்தவும், தேயிலை உற்பத்தியாளர்களே தமது தேயிலைத் தூளுக்கு விற்பனை விலையை நிர்ணயம் செய்துகொள்ளவும், தேயிலைத் தூள் விற்பனையை வெளிப்படையாக நடத்தவும் புதிதாக டீ சர்வ் எனப்படும் மின்னனு ஏலமையத்தை தோற்றுவித்தது இம்மையம் ஒருமாதத்திற்கு ஏறக்குறைய 15 இலட்சம் கிலோ தேயிலைத் தூளை வெளிப்படையான ஏலம் மூலமாகவும் மற்ற தேயிலை உற்பத்தியாளர்களுக்கு திருப்தி ஏற்படும் வகையிலும் விற்பனை செய்து வருகிறது.

சுருங்கக்கூறின், தொழிற் கூட்டுறவு சங்கங்கள் சங்க உறுப்பினர்களுடைய முடிவடைந்த பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு, உறுப்பினர்களுக்கு பெரிய அளவில் பொருளாதார மேம்பாடு,உறுப்பினர்களிடையே ஒருவருக்கொருவர் உதவி செய்யும் நோக்கம், ஒவ்வொருவரும் அனைவருக்காகவும், அனைவரும் ஒவ்வொருவருக்காகவும் என்னும் கொள்கை ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கின்றன.

மாவட்ட வாரியான தொழிற் கூட்டுறவு சங்கங்களின் முக்கிய வணிக வகைகளின் விவரம்
வரிசை எண். மாவட்டத்தின் பெயர் சங்கங்களின் எண்ணிக்கை முக்கிய வணிக வகை
1 சென்னை 27 வங்கி, அச்சிடுதல், பொருள்
2 காஞ்சிபுரம் 3 அச்சிடுதல், உலோகம்
3 செங்கல்பட்டு 6 விஷம் எடுத்தல் ,ஒப்பந்தத் தொழிலாளர்கள்
4 திருவள்ளுர் 10 தையல்,ஒப்பந்தத் தொழிலாளர்கள்
5 வேலூர் 6 அச்சிடுதல், பொறியியல்
6 ராணிப்பேட்டை 5 ஒப்பந்தத் தொழிலாளர்கள்
7 திருப்பத்தூர் 0 -
8 திருவண்ணாமலை 4 அச்சிடுதல்
9 கடலூர் 9 ஒப்பந்த தொழிலாளர்கள்
10 விழுப்புரம் 3 கயிறு
11 கள்ளக்குறிச்சி 1 மரச் சிற்பங்கள்
12 தஞ்சாவூர் 15 கயிறு, கைவினை பொருட்கள்
13 நாகப்பட்டினம் 0 -
14 மயிலாடுதுறை 2 செங்கல்
15 திருவாரூர் 2 பாலித்தீன்
16 திருச்சி 7 செங்கல், தையல்
17 கரூர் 4 காகித அட்டை
18 பெரம்பலூர் 2 கைவினை பொருட்கள்
19 அரியலூர் 2 கயிறு
20 புதுக்கோட்டை 8 கயிறு
21 மதுரை 12 அச்சிடுதல்,கயிறு
22 தேனி 7 பாலித்தீன், கயிறு
23 திண்டுக்கல் 7 பூட்டு தொழிலாளர், கயிறு
24 இராமநாதபுரம் 9 கயிறு
25 சிவகங்கை 9 கயிறு
26 விருதுநகர் 4 தீப்பெட்டிs
27 திருநெல்வேலி 9 தையல் , உலோகம்
28 தென்காசி 8 கயிறு
29 தூத்துக்குடி 12 தீப்பெட்டி
30 கன்னியாகுமரி 16 கயிறு, கைவினைபொருட்கள்
31 தர்மபுரி 9 அச்சிடுதல், கயிறு
32 கிருஷ்ணகிரி 8 கயிறு
33 சேலம் 16 சவ்வரிசி ,கயிறு
34 நாமக்கல் 3 அச்சிடுதல்
35 ஈரோடு 7 அச்சிடுதல் , கயிறு
36 கோயம்புத்தூர் 17 அச்சிடுதல் , உலோகம்
37 திருப்பூர் 9 கயிறு , ஒப்பந்தத் தொழிலாளர்கள்
38 நீலகிரி 21 தேயிலை
மொத்தம் 299