இந்தியாவில் தொழில் தொடங்குவதை ஆதரித்து ஊக்குவிக்கவும் கட்டுப்பாட்டு முறைமைகளை மேம்படுத்தவும் ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை, ஒன்றிய அரசின் பிற துறைகள், மாநில அரசுகள், ஒன்றியப் பகுதி அரசுகள் இவற்றை ஒருங்கிணைத்து அவற்றின் ஒத்துழைப்புடன் செயல்படுத்தும் முன்னெடுப்பே வணிக நடைமுறைகள் எளிதாக்குதலாகும்.
2014 ல் வெளியிடப்பட்ட 98 அம்ச சீர்திருத்த செயல் திட்டம் தொடங்கி வணிகத்துக்கு இணக்கமான சூழலை மேம்படுத்தும் நோக்கில் பல சீர்திருத்தங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வணிக மேம்பாட்டுத்துறை பல்வேறு துறைகள் மற்றும் முனைகளில் சீர்திருத்தங்களை உள்ளடக்கி, தொடர்ச்சியாக மாநில சீர்திருத்த செயல்திட்டங்களை வெளியிட்டது. வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்வதும் கட்டுப்பாட்டுச் சூழலமைவு மற்றும் தொழில்வணிகத்துக்கு வழங்கப்படும் சேவைகளின் செயல்திறனை மிகுப்பிப்பதுமே இதன் நோக்கமாகும். 2020 ஆம் ஆண்டுக்கான செயல் திட்டம் 15 பரப்பெல்லைகளில் 301 சீர்திருத்த நடவடிக்கைகளைக் கொண்டுள்ளது.
வணிக சீர்திருத்த செயல் திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு வணிக எளிதாக்கும் சட்டம் 2018 ஐ இயற்றியுள்ளதோடு வணிக எளிதாக்கும் விதிகள் 2017 ஐயும் வரைந்துள்ளது. நாட்டில் மிக விரும்பப்படும் முதலீட்டுத் தளங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற மாநில அரசின் வேணவாவை நடைமுறைப்படுத்தும் நோக்கில் அவை அமைந்துள்ளன.
தகவல் தொழில் நுட்ப முன்னெடுப்பாக, முதலீட்டாளர்களுக்குத் தேவையான சேவைகளை குறித்த காலக்கெடுவுக்குள் வெளிப்படைத் தன்மையுடன் வழங்கும் விதமாக ஒரு தகவு (www.tnswp.com) வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்தகவின் வாயிலாக தொழில் முனைவோர் நகர் ஊரமைப்பு இயக்குநரகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, தொழிலகப்பாதுகாப்பு மற்றும் நலத் துறை, பொது நலம் மற்றும் நோய்த்தடுப்புத் துறை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு சார் அமைப்புகளிடமிருந்து பெறவேண்டிய ஒப்புதல்கள்/ இசைவுகள்/ உரிமங்கள் / புதுப்பித்தல்கள் தொடர்பான 160 சேவைகளைப் பெற இயலும்.
அரசு வணிக நடைமுறைகளை எளிதாக்கவும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழ்லை உருவாக்கவும் முனைப்பு கொண்டுள்ளது. மாநில அரசின் பல்வித முன்னெடுப்புகளால் வணிக எளிதாக்கல் குறியீட்டில் 2016 ல் 18 ஆம் இடத்தில் இருந்த தமிழ்நாடு 2019 ல் 14 ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது.